கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு
‘’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை’’
என்று அன்றே வள்ளுவர் உரைத்தார். பழங்காலத்தில் ஆதிமனிதன் பாமரராய் விலங்கோடு விலங்காகக் குகைகளிலும் பாறை அடிகளிலும் வாழ்ந்து வந்தான். இன்றோ மின்சாரம், தொழில்நுட்பம் என்று நாகரீகம் பெற்று நவீன வாழ்வை வாழ்கிறான். இதற்கு அடிப்படைக் காரணம் கல்விதான் என்று திண்ணமாகக் கூறலாம். செல்வத்துள் செல்வம் மனிதன் கல்வியறிவு பெற்று விளங்குவதே ஆகும். எனினும், கல்வி கற்பதைத் தங்குதடையற்ற ஒரு பாதை என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதாகும். இன்று இளையர்கள் பலர் கல்வியை ஒரு சுமையாகக் கருதி அதைக் கசப்புடன் நோக்குகிறார்கள். ஆனால், கல்வி நம் அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று என்று அறிந்து அதைப்போல் இனிதாவது எங்கும் இல்லை என்ற பேருண்மையை உணர வேண்டும்.
இன்றைய கல்விமுறை பெரும்பாலும் மதிப்பெண்களைப் பொறுத்தே விளங்குகிறது என்பது வெள்ளிடைமலை. அறிவைப் பெருவதற்காக உருவெடுத்த கல்வி, இன்று ஒருவரின் அறிவாற்றலை வெறும் இரண்டு மணி நேர தேர்வை வைத்து முடிவு செய்ய துணைப்புரிகிறது. இளையர்கள் சிலருக்கு இது ஏமாற்றத்தைத் தருவதோடு, இறுதியில் கல்வியை வெறுத்து அதைப் பாகற்காயைவிட கசப்பாக நோக்கவும் செய்கிறது. இவர்களின் சிந்தனையில் எத்தவறும் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இதைத்தவிர கடந்துபோகும் பாதை வேறொன்றும் இல்லை என்பதும் மெய்யாகும். கல்வியின் கரடுமுரடான பாதையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அக்கல்வியினால் பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் நன்மைகளைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்பது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறவேண்டிய அறிவுரையாகும். கல்வியினால் பிற்காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நல்ல வேலை வாய்ப்புகளையும், இரசிக்கக்கூடிய வாழ்வையும் எண்ணி இன்று மாணவர்கள் தங்கள் கல்வியில் கண்ணும் கருத்துமாய் கடமையாற்றவேண்டும். இனிப்பான இளநீர் வேண்டுமென்றால் தென்னையில் ஏறத்தான் வேண்டும் அல்லவா?
‘‘ஈதல் இசைப்பட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு’’
என்று வள்ளுவர் அன்று உரைத்தது இன்றைய மாணவர்களுக்குப் பொருந்தும். வாழ்ந்தால் புகழ் கிடைக்கும் அளவிற்கு வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வதற்கே ஓர் அடையாளம் கிட்டும். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் படிப்பறிவு பெற்று சாதித்தோம் என்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு முயற்சியினால் சிறந்தோங்க முடியும் எனச் சரித்திரத்தில் பதிக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், கசப்பென்று எண்ணாமல் வரும் சவால்களை முயற்சியினால் எதிர்கொண்டு கல்வியை இரு விழியாக எண்ணி முழு ஈடுபாட்டுடன் இருந்தால், அது நமக்குப் பிற்காலத்தில் இனிப்பாக அமைந்து, பல நன்மைகளை வகுத்து நம் வாழ்வுக்கென ஓர் அடையாளத்தையும் தேடித் தருகிறது.
கல்வி என்பது ஏட்டுக்கல்வியை மட்டும் குறிக்காது. வாழ்க்கைக் கல்வியையும் குறிக்கிறது. அதனால், நாம் அனுதினமும் கற்கும் அனுபவங்களும் நமக்கு ஒரு பாடமாக விளங்குகிறது. சிலர் பொன்னான அனுபவங்கள்மூலம் கற்பார்கள். பலரோ கசப்பான அனுபவங்களின் வழித்தான் கற்பார்கள். உதாரணத்திற்கு, ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கும் பள்ளிகள் நல்ல நட்பு மற்றும் தீய நட்பின் முரண்பாட்டை விளக்கி மாணவர்களின் வாழ்வை நல்வழியில் உருவாக்க முயற்சி செய்கின்றன. ஆனால், இன்றைய இளையர்களில் பலர் அவற்றிற்குச் செவிசாய்க்காமல் தீய நண்பர்களின் செல்வாக்கிற்கு அகப்பட்டு, பிறகு பல இன்னல்களால் அவதியுறுகின்றனர். அதற்குப் பின்தான், இது தவறு என்ற உண்மையை உணர்ந்து, நல்ல நண்பர்களை நாடி வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்கிறார்கள்.
வாய்ப்புகள் நமக்குத் தானாக அமையாது. நாம்தான் அவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை அமைப்பதற்குக் கல்வி ஓர் இன்றியமையாத கருவியாகும். ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பதைப் போல ஏட்டுக்கல்வியைக் கற்று அதோடு வாழ்க்கை கல்வியையும் ஒழுக்க நெறிகளையும் பயின்று இந்த உலகிற்குப் புகழ் சேர்க்கவேண்டும். இந்தப் பாதை நிச்சயமாகக் கடுமையானதுதான். குறைவான மதிப்பெண்கள், மற்றவர்களின் கேலி, கிண்டல் எனப் பலவிதமான கசப்பான விஷயங்களைக் கொண்டமைந்ததுதான் நம் கல்வியும் வாழ்க்கையும். ஆனால், அப்பாதையைக் கடந்த பின் நாம் கற்ற கல்வி நமக்கு அமிர்தத்தைத் தேடித் தரும். இன்று நாம் விதைக்கும் விதைகள் தானே நாளை நமக்குக் காய்க்கனி கொடுக்கும் மரங்களாகும்!
Balamurugan Hariharan (17-A5)